புதுடில்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி.,க்கு வழங்கப்படும் மருந்துகளை வழங்க சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில், 137 பேரை பாதித்துள்ளது. ஏற்கனவே, கர்நாடகா மற்றும் டில்லியில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில், மஹாராஷ்டிராவில், நேற்று ஒருவர் உயிரிழந்தார். வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதை அடுத்து, வரும், 31 வரை, மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதை தடுக்கும் நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், 'கொரோனா' தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியின் உடல் நிலை மற்றும் வயதை பொறுத்து, எச்.ஐ.வி.,க்கு வழங்கப்படும், 'லோபினாவிர்' மற்றும், 'ரிடோனாவிர்' மருந்துகளை வழங்க, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீரிழிவு, சீறுநீரக கோளாறு, நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த மருந்துகளை வழங்க, நேற்று முதல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.