விழித்திரு; விலகி இரு; வீட்டில் இரு :முதல்வர் பழனிசாமி அறிவுரை

சென்னை : 'அரசின் உத்தரவை மீறுவோர் வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.பிரதமரை தொடர்ந்து முதல்வர் இ.பி.எஸ். நேற்று 'டிவி' யில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:உலகையே ஆட்டிப்படைக்கும் 'கொரோனா' வைரஸ் சீனாவில் துவங்கி காட்டுத் தீ போல் வேகமாக பரவி வருவதை நாம் அறிவோம். மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று 21 நாட்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும்.தமிழக அரசு இந்நோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.இந்நோயின் தீவிரத்தை அறிந்து நீங்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அவர்களாகவே முன்வந்து வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் அருகில் வசிப்பவர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அல்லது சுகாதாரத்துறைக்கு அல்லது காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.தனிமைப்படுத்துதல் என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் சமுதாயத்தையும் நாட்டையும் பாதுகாக்கத் தான். உங்கள் குடும்பம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அரசுக்கு முக்கியம். இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல. உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்கான அரசின் உத்தரவு என்பதை உணருங்கள். நோய் பரவுவதை கட்டுப்படுத்த அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. எனவே பொது மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும்.பொறுப்பான குடிமக்களாக இருந்து நம்மையும் சமுதாயத்தையும் காப்போம். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் பால் இறைச்சி மருந்துகள் மற்றும் மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழித்திரு; விலகி இரு; வீட்டில் இரு. அரசு பிறப்பித்த உத்தரவுகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். மக்கள் நலன் கருதி அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் உத்தரவுகளை மீறுவோர் மீது வீண் வதந்திகளை பரப்புவோர் மீது கலெக்டர்கள் போலீசார் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.