சி.பி.எஸ்.இ., அங்கீகாரம்; அவகாசம் நீட்டிப்பு


சென்னை : சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கான, 'ஆன்லைன்' பதிவுக்கு, வரும், 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகள், ஆண்டுதோறும், அங்கீகாரம் புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.ஒவ்வொரு கல்வி ஆண்டுக்கும் அனுமதி பெற, அதற்கு, ஓர் ஆண்டுக்கு முன்பே, ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில், விண்ணப்ப பதிவு வசதி செய்து தரப்பட்டுள்ளது. 

ஒவ்வோர்ஆண்டும், டிச., முதல் பிப்., வரை, 'ஆன்லைன்' பதிவுகளுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பள்ளிகள், ஆன்லைனில் பதிவு செய்வதில், காலதாமதம் செய்துள்ளன.மேலும், சி.பி.எஸ்.இ.,யின் கிடுக்கிப்பிடி காரணமாக, பள்ளிகள் தரப்பில், பல்வேறு ஆவணங்களை இணைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்காக, கூடுதல் அவகாசம் வேண்டும் என, பள்ளிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, 'வரும், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம்' என, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவித்துள்ளது.