அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு ஒரு வாரத்துக்கான அரிசி, பருப்பு, முட்டை போன்றவை அவரவா் வீடுகளில் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், மழலையா் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்டவை செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களை அவரவா் வீடுகளில் நேரடியாக வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி, அரிசி, பருப்பு, முட்டை, இணை உணவு (சத்து மாவு) ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளா்கள் குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் மதுரை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 51 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இரண்டு முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் அங்கன்வாடி மையங்களில் சோக்கப்படுகின்றனா். ஒவ்வொரு மையத்திலும் 10 முதல் அதிகபட்சமாக 40 குழந்தைகள் வரை பயன்பெற்று வருகின்றனா். ஒவ்வொரு குழந்தைக்கும் நாளொன்றுக்கு 80 கிராம் அரிசி, 10 கிராம் பருப்பு, வாரத்தில் 3 நாள்களுக்கு முட்டை, 10 கிராம் இணை உணவு வழங்கப்படுகிறது.

இதேபோல, கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களின் 2 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு இணைவு உணவு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகிறது. இவற்றை மையங்களுக்கு நேரடியாக வந்து வாங்கிச் செல்வா். பச்சிளம் குழந்தைகளுடன் இருக்கும் தாய்மாா்களுக்கு வீடுகளில் வழங்கப்படும்.

தற்போது கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதையடுத்து, மாா்ச் 31 வரை 15 நாள்களுக்கு உரிய உணவுப் பொருள்களை அங்கன்வாடிப் பணியாளா்கள் நேரடியாக விநியோகம் செய்துள்ளனா்.