சென்னை: ''மருத்துவ தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன் படுத்தப்படும்'' என தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை துணை வேந்தர் சுதா சேஷய்யன் கூறினார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: மருத்துவ பல்கலையின் பட்டமளிப்பு விழா மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ளது. விழாவில் மாநில கவர்னரும் பல்கலையின் வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்குவார். விண்வெளி ஆராய்ச்சி மையமான 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கன் அணுசக்தித் துறை முன்னாள் தலைவர் சிதம்பரம் ஆகியோர் மருத்துவ துறையில் செயற்கை 

நுண்ணறிவு தொழில் நுட்பம் குறித்து சிறப்புரையாற்ற உள்ளனர். இந்தாண்டு பட்டமளிப்பு விழா பல்கலையின் வெள்ளி விழா அரங்கில் முதன் முறையாக நடைபெற உள்ளது. மொத்தம் 17 ஆயிரத்து 590 பேர் பட்டம் பெறுகின்றனர். விழாவில் நேரடியாக 724 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படும்.

மருத்துவ தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்வு மையங்களில் 'கேமரா' பொருத்தப்படுவதுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையில் தேர்வுகளை கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக பிரத்யேக மென்பொருள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இது நடைமுறைக்கு வந்த பின் எந்த தேர்வு கூடத்தில் முறைகேடுகள் நடந்தாலும் அதுகுறித்த தகவல்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்து விடும். இந்த வசதியை ஆகஸ்ட் மாதத்திற்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். கடந்தாண்டு 'நீட்' நுழைவு தேர்வு வாயிலாக 

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தவர்களுக்கு பதிவு எண் வழங்குவது தாமதமாகிறது. 'நீட்' தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதும் அதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதுமே காரணம். ஆனாலும் மாணவர்கள் நலன் கருதி தற்காலிக பதிவு எண் வழங்கப்படும். விசாரணை முடிவுக்கு வந்த பின் நிரந்தர எண் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். பல்கலை பதிவாளர் டாக்டர் அஸ்வத் நாராயணன் உடனிருந்தார்.