போலி பள்ளிகளில் மாணவரை சேர்க்காதீர்! பெற்றோருக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை
சென்னை : 'அங்கீகாரம் பெறாமல், சி.பி.எஸ்.இ., பெயரை சொல்லி ஏமாற்றும் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என, பெற்றோருக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வேண்டுகோள் விடுத்து உள்ளது. 

ஆசை வார்த்தை

தமிழகம் உள்பட, பல மாநிலங்களில், அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படும் பல பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,யின் பெயரைக்கூறி, மாணவர்களை சேர்த்து வருகின்றது. இறுதியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்க, பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, சி.பி.எஸ்.இ., செயலர் அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பல பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,யிடம் முறையாக அங்கீகாரம் பெறாமல், ஆசை வார்த்தை கூறி, முறைகேடாக மாணவர்களை சேர்த்து வருவதாக புகார்கள் வந்துள்ளன. கவர்ச்சிகர விளம்பரங்கள் வாயிலாக, அந்த பள்ளிகள், மாணவர்களை சேர்க்கின்றன.

ஏமாற வேண்டாம்

அதாவது, 'சி.பி.எஸ்.இ.,யின் பாட திட்ட முறையில் நடத்தப்படுகிறது. சி.பி.எஸ்.இ.,யின் பாட திட்டத்தை பின்பற்றுகிறது. விரைவில், சி.பி.எஸ்.இ., இணைப்பு பெறப்படும்' என்ற தகவல்களை, ஆங்கிலத்தில் குறிப்பிட்டு, மாணவர்களை சேர்க்கின்றன. இதுபோன்ற வாசகங்கள் உள்ள பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,யின் அங்கீகாரம் பெற்றவை என்று கருத முடியாது. 

எனவே, இந்த வார்த்தைகளை நம்பி, பெற்றோர் ஏமாற வேண்டாம். சட்டப்படி அங்கீகாரம் பெற்ற, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் பெயர், அங்கீகார எண், பள்ளி நிர்வாகிகள் பெயர் உள்ளிட்டவை, சி.பி.எஸ்.இ.,யின், www.cbseaff.nic.in என்ற, இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை பெற்றோர் ஆய்வு செய்து கொள்ளவும். போலிகளை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு, அறிவிப்பில் கூறியுள்ளார்.