சென்னை:கொரோனா பாதிப்பு காரணமாக, அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால், பயிற்சி மையங்களின் ஆன்லைன் வகுப்புகள் களைகட்டியுள்ளன.உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால், இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 

கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்களில், நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால், மாணவர்கள் நுழைவு தேர்வுக்கு தயாராகும் வகையில், பயிற்சி மையங்கள் சார்பில், ஆன்லைன் வகுப்புகள் களைகட்டியுள்ளன. நீட், கியூசெட் ,ஜே.இ.இ., உள்ளிட்ட அனைத்து வகை நுழைவு தேர்வுகளுக்கும், நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளன. ஆசிரியர்கள் அவரவர் வீடுகளில் இருந்தும், பயிற்சி மையங்களில் இருந்தும், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துகின்றனர். மாணவர்கள் மொபைல் போன் வழியாகவே, பாடங்களை கவனித்து, சந்தேகங்களை வீடியோவில் கேட்டு, தெளிவுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ஆனால், இந்த பயிற்சிக்கு, தனியார் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்காமல், சேவை அடிப்படையில் குறைந்த கட்டணம் பெற வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கு, தனியார் பயிற்சி நிறுவனங்கள் சேவை அடிப்படையில், இலவசமாக ஆன்லைனில் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.