சென்னை:'தனியார் பள்ளிகள், சிறப்பு வகுப்புகள் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. வரும், 31 வரை, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை தவிர, வேறு எந்த விதமான வகுப்புகளும் நடக்கக் கூடாது என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.புகார்இந்நிலையில், சில மாவட்டங்களில், சில தனியார் மெட்ரிக்குலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக, பள்ளி கல்வித் துறைக்கு, புகார்கள் வந்தன.இது தொடர்பாக, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையில், அனைத்து பள்ளிகளும் முழு அளவில், ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஏற்கனவே வகுப்புகளை ரத்து செய்துவிட்ட நிலையில், சில தனியார் பள்ளிகள், மறைமுகமாக, ரகசியமாக பயிற்சி வகுப்புகளை நடத்துவதாக, புகார்கள் வந்தபடி உள்ளன.

இந்த பள்ளிகள் மீது, மிக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை, முதன்மை கல்வி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.ரத்துசம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம், நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன், அந்த பள்ளி நிர்வாகிகள் மீது, தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ், குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.மாணவர்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் வைத்து, தனியார் பள்ளிகள் மற்றும் அதன் நிர்வாகிகள், நடந்து கொள்ள வேண்டும்.ஆசிரியர்களும் மிகவும் பொறுப்புடன், நடந்து கொள்ள வேண்டும். மிகவும் இக்கட்டான சூழலில், அரசுக்கும், சமூகத்திற்கும், முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், அனைவரும் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

அதேபோல, கல்லுாரி வகுப்புகளும், தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசின் உத்தரவுப்படி, அனைத்து தனியார் கல்லுாரிகளும் செயல்பட வேண்டும் என, கல்லுாரி கல்வி இயக்குனர், ஜோதி வெங்கடேசன், சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.