விருதுநகர்: 'நாசா' விண்வெளி மையத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தும் பணவசதியின்றி இன்ஜி., மாணவர் தவிக்கிறார். அரசின் நிதி உதவி கிடைத்தால் அமெரிக்கா சென்று வெற்றி பெற்று நாடு திரும்புவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் செல்லுாரை சேர்ந்தவர் சங்கர் வினோத் 21. விருதுநகர் காமராஜர் இன்ஜி., கல்லுாரியில் மூன்றாமாண்டு இ.இ.இ., படித்து வருகிறார். 'நாசா' விண்வெளி மையத்திற்கு செல்ல அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பணவசதி இல்லாமல் தவித்து வருகிறார். மாணவர் கூறியதாவது:

என் தந்தை சவுந்திரபாண்டி. வங்கியில் தினக்கூலி அடிப்படையில் அலுவலக உதவியாளராக பணிபுரிகிறார். எனக்கு அறிவியல் போட்டிகளில் ஆர்வம் அதிகம். 'கோ பார் குரு' என்ற ஆன்லைன் தேர்வில் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளேன். உலக அளவில் நடக்கும் போட்டி அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் ஜூன் இறுதியில் நடக்க உள்ளது.

இதில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கான செலவு ரூ.1.79 லட்சம் வரை ஆகிறது. மார்ச் 10க்குள் நுழைவு கட்டணம் ரூ.30,000 கட்ட வேண்டியுள்ளது. அறிவியல் துறையில் சாதிக்க வறுமையான குடும்ப சூழலில் கஷ்டப்பட்டு இன்ஜி., படித்து வருகிறேன். உலக அளவில் நடக்கும் அறிவியல் போட்டியில் கலந்து கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்க்க காத்திருக்கிறேன். அதற்கு அரசு சார்பில் நிதியுதவி கிடைத்தால் கண்டிப்பாக வெற்றி பெற்று நாடு திரும்புவேன் என்றார்.