சென்னை:''கொரோனா வைரஸ் குறித்து, தவறான தகவல்கள் பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, டி.ஜி.பி., திரிபாதி கூறினார்.

கொரோனா வைரஸ் பரவுவது குறித்து, 'பேஸ்புக், டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வருகின்றன. கோழிகள் வாயிலாக, கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி பரப்பிய, கரூர் மாவட்டம் கூனம்பட்டியைச் சேர்ந்த, பெரியசாமி, 47, என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், கொங்கம்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடாசலம், 30, என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோல வதந்தி பரப்புவோரை, போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், 'கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், தமிழகத்தில், 144 என்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது' என, சமீபத்தில் தகவல் பரவியது.இது குறித்து, டி.ஜி.பி., திரிபாதி கூறுகையில், ''கொரோனா வைரஸ் குறித்து, பொது மக்களிடம் பீதி ஏற்படும் வகையில், வதந்தி பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.