சென்னை கொரோனா' நிவாரண தொகையை வழங்குமாறு, சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத ரேஷன் கார்டுதாரர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில், 2.01 கோடி அரிசி கார்டுகள்; 5.50 லட்சம், சர்க்கரை; 45 ஆயிரம், எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டுகள் என, மொத்தம், 2.07 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. 
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, ஏப்., 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரணமாக, அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும், தலா, 1,000 ரூபாய் ரொக்கத்துடன், ஏப்ரல் மாதத்திற்கு உரிய அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகிய பொருட்களை இலவசமாக வழங்குவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.தங்களுக்கும், கொரோனா நிவாரண உதவிகளை வழங்குமாறு, சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத ரேஷன் கார்டுதாரர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது குறித்து, சர்க்கரை கார்டுதாரர்கள் கூறியதாவது:ரேஷனில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதுபோல், கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரணத்தையும், அரசு அறிவித்தது சரியான செயல் அல்ல. ஊரடங்கு அமலால், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் என, அனைவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டாமல், அரிசி கார்டுதாரர்களை போல், சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத கார்டுதாரர்களுக்கும், 1,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை, முதல்வர், இ.பி.எஸ்., அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.