டெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களில் ஊரடங்கு 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை என்று அறிவிக்கப்பட்டியிருந்தது. இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரையில் நாளை அதிகாலை 5 மணி வரை இது நீடிக்கிறது. 

இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் கேபினட் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர் மற்றும் மாநில தலைமைச் செயலர்கள் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி ,சத்தீஸ்கர் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 75 மாவட்டங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மாஹே மாவட்டம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த பட்டியலில் தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதே போன்று வரும் 31 ஆம் தேதி வரை மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்தை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்கள் கண்டறியப்பட்டதால் இந்த 3 மாவட்ட எல்லைகளையும் மூடி சீல் வைக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 3 மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளதால் வெளி வாகனங்கள் எதுவும் உள்ளே வர அனுமதிக்கப்படமாட்டாது. 

இந்த ஊரடங்கை பொறுத்தவரையில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யக்கூடிய நிறுவனங்கள் திறந்து இருக்கும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் அவசிய பணிகள் தவிர அணைத்து பணிகளையும் தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.