சென்னை : வனக்காப்பாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்க வருவோர், பேனா உள்ளிட்ட எழுது பொருட்களை எடுத்து வர, தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு மார்ச், 8ல் நடக்க உள்ளது. இதற்கான மையங்கள் ஒதுக்கப்பட்டு, 'ஹால் டிக்கெட்' வழங்கும் பணி நடந்து வருகிறது. இத்தேர்வில் பங்கேற்போருக்கான கட்டுப்பாடுகளை, வனத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, ஆன்லைன் தேர்வில், வினாக்களுக்கு, விடை அளிக்கும் நடைமுறைகள், அதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தேர்வு கூடத்துக்கு வருவோர், பேனா, காகிதம் போன்ற எழுது பொருட்கள் எதையும் எடுத்து வரக்கூடாது. தேவையான எழுது பொருட்கள், தேர்வு மையத்திலேயே வழங்கப்படும்.

ஆள்மாறாட்டம் செய்வது, அனுமதிக்கப்படாத பொருட்களை வைத்திருப்பது, அடுத்தவரை பார்த்து விடை எழுதுவது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் வெளியேற்றப்படுவதுடன், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.இவ்வாறு, வனத்துறை அறிவித்துள்ளது.