சென்னை:'முக கவசம் மற்றும் கிருமி நாசினியை அதிக விலைக்கு விற்பவர்கள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்' என, தமிழக அரசு எச்சரித்துள்ளது. 

'கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, முக கவசம் அணியுங்கள்; சோப்பு மற்றும் கிருமி நாசினி வாயிலாக, அடிக்கடி கைகளை கழுவுங்கள்' என, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. திடீரென தேவை அதிகரித்துள்ளதால், முக கவசம், கிருமி நாசினிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தமிழகம் முழுதும் உள்ள, மருந்து கடைகளில், முக கவசம் மற்றும் கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்கள், அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.இதையடுத்து, சென்னை, கிருஷ்ணகிரி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிரடி சோதனை நடத்தி, அதிக விற்பனைக்கு, முக கவசம் மற்றும் கிருமி நாசினி விற்ற, மருந்துக் கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முக கவசம் மற்றும் கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்கள், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவர் என, அரசு நேற்று எச்சரித்துள்ளது.