'பிறரிடம் பேசும் போது இடைவெளி அவசியம்'

சென்னை :''கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, பிறரிடம் பேசும் போது, இடைவெளி விட்டு பேச வேண்டும்,'' என, வருவாய் நிர்வாக ஆணையர், ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.அப்போது, வருவாய் நிர்வாக ஆணையர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

பிறரிடம் பேசுகையில், இடைவெளி விட்டு பேசுங்கள். அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். தமிழகத்தில், அரசு பட்டியலிட்டுள்ள கடைகள் மட்டுமே மூடப்படுகின்றன; சிறு கடைகள் மூடப்படவில்லை. எனவே, வதந்திகளை நம்பாதீர்.இவ்வாறு, அவர் கூறினார்.

இதில், சுகாதாரத் துறை செயலர், பீலா ராஜேஷ் கூறியதாவது:சுகாதார பணியில் ஈடுபடும் ஊழியர்களை தவிர, பொதுமக்கள் சாதாரண சோப்பு மற்றும் தண்ணீர் பயன்படுத்தி, கை கழுவினால் போதும். அனைவரும், 'ஹேன்ட் சானிடேஷன்' மற்றும், முக கவசம் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவற்றை அதிக மக்கள் பயன்படுத்துவதால், சுகாதார பணியில் ஈடுபடுவோருக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதிக விலைக்கும், கள்ளச்சந்தையிலும், முக கவசம் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டால், கடைக்கு, 'சீல்' வைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.