சென்னை :கொரோனா வைரஸ் தடுப்புக்காக, முதல்வரின் நிவாரண நிதிக்கு, தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுதும், ஏப்ரல், 14 வரை, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு, பொதுமக்கள், தங்களால் ஆன நிதியுதவியை அரசுக்கு வழங்கலாம் என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். 
இதைத் தொடர்ந்து, 'தங்கள் கூட்டுக்குழுவில் உள்ள ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ளலாம்' என, ஜாக்டோ - ஜியோவான, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு, முடிவு செய்துள்ளது. மார்ச் மாத சம்பளத்திலேயே பிடித்தம் செய்து கொள்ள, தமிழக அரசுக்கு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.