பெண்களுக்கு கொரோனா நோய் தடுப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வரும் மேலுார் அரசு பள்ளி மாணவியை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த மேலுாரைச் சேர்ந்த முத்துவேல் - ராஜேஸ்வரி தம்பதி மகள் முகிலா, 14; மேலுார் அரசு மாதிரி பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பள்ளியில் ஆசிரியர்கள், உலகில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தடுப்பு பயிற்சி முறைகளை செய்து காண்பித்தனர்.அதனை கவனமாக கற்றுக்கொண்ட மாணவி முகிலா, முழுமையாக கடைபிடிப்பதுடன், தனது வீட்டினருக்கும் கைகழுவும் முறைகளை கற்றுக்கொடுத்தார். அதனைத்தொடர்ந்து தமது கிராமத்து வயல் வெளிகளில் கூட்டம் கூட்டமாக விவசாய கூலி வேலை செய்துவரும் பெண்களிடம் கைகழுவுவதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறி சுத்தமாக கைகழுவும் முறைகளை செய்து காண்பித்து கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.தனது சுற்றுப்புற கிராமங்களில் கூட்டமாக இருக்கும் பெண்களுக்கும் கைகழுவும் முறைகளை செய்து காண்பிக்கும் மாணவியின் சேவைப்பணியை இப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.இதுகுறித்து வாட்ஸ்-ஆப் மூலம் அறிந்த கலெக்டர் கிரண்குராலா மற்றும் டி.இ.ஓ., கார்த்திகா மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.