சென்னை : 'கல்லுாரிகளின் அங்கீகார விபரங்களை, இணையதளங்களில் வெளியிட வேண்டும்' என, பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., சார்பில், அனைத்து பல்கலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: பல்கலைகள், தங்கள் கல்வி நிறுவன அங்கீகார விபரங்கள், உள் கட்டமைப்பு வசதிகள், மாணவர் விபரங்கள் போன்றவற்றை இணையதளத்தில் வெளியிட, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதேபோல், தங்கள் பல்கலைகளின் இணைப்பில் உள்ள கல்லுாரிகளின் விபரங்களையும், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள், பேராசிரியர்கள், அரசு மற்றும்தனியார் துறையினர் என, ஒவ்வொரு தரப்பினரும், கல்லுாரியின் அங்கீகார நிலை, இணைப்பு அந்தஸ்து போன்றவற்றை தெரிந்து கொள்ளும் வகையில், இணையதளத்தில், இந்த விபரங்களை வெளியிட வேண்டும். இந்த பட்டியலில், ஒவ்வொரு கல்லுாரியின் பெயருடன், அதன் இணைப்பு அந்தஸ்துக்கான கால அவகாசத்தையும் குறிப்பிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.