ஈரோடு:''ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட, '17 பி' நடவடிக்கையை கைவிடக்கோரி, விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளோம்,'' என, தமிழ்நாடு அரசு, அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர், ஜனார்த்தனன் கூறினார்.
ஈரோட்டில், அவர் கூறியதாவது:பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, 2016 பிப்., 19ல் காத்திருப்பு போராட்டம் நடத்தியபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 'புதிய பென்ஷன் திட்டத்தை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும்' என்றார். இப்போதுள்ள அரசு, அதில் முனைப்பு காட்டவில்லை. அனைத்து அரசுத் துறையிலும், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், பணிச்சுமை அதிகரித்துள்ளது.அரசு ஊழியர்கள் பிரச்னை, சம்பள கமிஷன் பிரச்னைக்காக நியமிக்கப்பட்ட சித்திக் கமிட்டி, ஸ்ரீதர் கமிட்டி பரிந்துரைகளை வெளியிட வேண்டும். 2019ல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், 5,600 பேருக்கு, '17 பி' நோட்டீஸ் வழங்கப்பட்டு, நடவடிக்கையில் உள்ளது. இதை வாபஸ் பெறக் கோரி, முதல்வரை சந்திக்க உள்ளோம்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர், அன்பரசுவின் நடவடிக்கை சரியில்லாததால், இதுபோன்ற பிரச்னைகளை சந்திக்கிறோம். தலைமையை மாற்ற, தேவையான முயற்சி மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.