'கொரோனாவை விரட்டலாம் வாங்க' தன்னார்வலர்களுக்கு அழைப்பு

திண்டுக்கல் : 'கொரோனா' பரவலை தடுக்க அரசுடன் இணைந்து உதவி செய்ய தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 35 பேர் 'கொரோனா'வால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் தாக்கம், ஊரடங்கு உத்தரவின் அவசியத்தை உணராத பலர் ஊர் சுற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தனிமைப்படுத்தப்பட்டோரை கண்காணிக்கவும் அதிக ஆட்கள் தேவைப்படுகிறது. இதனால் அரசுக்கு உதவி செய்ய தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை சார்பில் http://stopcorona.xenovex.com/login இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் தங்கள் பெயர், அலைபேசி எண், உணவு வழங்குதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தனிமைப்படுத்தியவர்களை கண்காணித்தல் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு தன்னார்வலர் எண் வழங்கப்படும். தேவைப்படும் போது அழைக்கப்படுவர். கல்லுாரி மாணவர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், லேப்டெக்னீசியன், சமூக ஆர்வலர்கள் பதிவு செய்து வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.