கொரோனா,சோதனை கருவி, கண்டுபிடிப்பு, கர்ப்பத்துடன், சாதித்த பெண்

மும்பை:மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, மினால் தாகாவே என்ற பெண், நிறைமாத கர்ப்பத்துக்கு இடையிலும், நாட்டின் முதல் கொரோனா சோதனை கருவியை கண்டுபிடித்து, அசத்தியுள்ளார். அவருக்கு, பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில், 'மைலாப் டிஸ்கவரி' என்ற ஆய்வகம் செயல்பட்டு வருகிறது.


நிறைமாத கர்ப்பிணி


இந்த ஆய்வகத்தின் ஆராய்ச்சி துறை தலைவராக, மினால் தாகாவே பேசாலா என்ற பெண் பதவி வகிக்கிறார். இவர், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் தகவல் அறிந்ததும், வைரசை கண்டறியும் சோதனை கருவியை தயாரிக்கும் முயற்சியில், கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதும், தன் குழுவினருடன் இணைந்து, தொடர்ந்து கடுமையான ஆய்வில் ஈடுபட்டு வந்தார்.

உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு பிரச்னகளை சந்தித்தாலும், தொடர்ந்து ஆய்வு நடத்திய மினால், மார்ச், 18ல், சோதனை கருவியை கண்டுபிடித்து, அதை, தேசிய நோய் தொற்று துறையின் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைத்தார்.

இரண்டரை மணி நேரம்

அதற்கு அடுத்த நாளே, பிரசவ வலி ஏற்பட்டு, மினால், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து மினால் கூறியதாவது:நாங்கள் கண்டுபிடித்துள்ளது, நாட்டின் முதல் கொரோனா சோதனை கருவி. இந்த கருவியின் மூலம், ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா, இல்லையா என்பதை, இரண்டரை மணி நேரத்தில் அறிய முடியும். தற்போது இந்த சோதனையை உறுதி செய்வதற்கு, எட்டு மணி நேரமாகிறது.

நாங்கள் கண்டுபிடித்துள்ள கருவியின் விலை, 1,200 ரூபாய். தற்போது கொரோனா சோதனைக்காக வெளிநாடுகளில் இருந்து நாம் வாங்கும் கருவியின் விலை, 4,500 ரூபாய். நாட்டின் முதல் சோதனை கருவியை கண்டுபிடித்த அடுத்த நாளே, எனக்குபெண் குழந்தை பிறந்தது; இது, எனக்கு இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்தை போன்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல சிரமங்கள் இருந்தாலும், நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்கு, இதுவே சரியான நேரம் என்பதை உணர்ந்து, தொடர்ந்து பணியாற்றினேன். இதற்கு பலன்கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.