கொரோனா வைரஸ் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலும் இந்நோய் தற்போது பரவி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, மாணவர்கள் அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல்-இருமல் வரும்போது துணிகளை கொண்டு மூடிக்கொள்ளுதல், உடல்நிலை சரியில்லாத சமயங்களில் தனியாக டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துதல், தொடுதல்களை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக, கொரோனா மட்டுமின்றி, அனைத்து விதமான தொற்று நோய்களும் பரவாமல் தடுக்க முடியும் என்று மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்துள்ளது. அதன்படி இன்று முதல் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வில் செயல்முறை விளக்கங்களை அளிக்க தனியாக டாக்டர்கள் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.