சென்னை :'தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதால், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவர்' என, முதல்வர், பழனிசாமி தெரிவித்துள்ளார்.

'கொரோனா வைரஸ்' நோய் தொற்றை தடுக்க, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் முதல், மாநிலம் முழுவதும், 144 தடையுத்தரவு அமலுக்கு வந்துள்ளது.இதுதொடர்பான ஆய்வு கூட்டம், நேற்று சென்னையில், முதல்வர் வீட்டில், அவரது தலைமையில் நடந்தது. தலைமை செயலர், சண்முகம், டி.ஜி.பி., திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர், தீரஜ்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

புதுச்சேரியிலும், 'ஆல்பாஸ்'
புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு செய்திக்குறிப்பு: கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும், ஏப்ரல், 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், பள்ளி ஆண்டு இறுதி தேர்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 1ம் வகுப்பில் இருந்து, 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, முதல்வர் வெளியிட்ட அறிக்கை:கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து பள்ளிகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டு, இன்று வரை அமலில் உள்ளது. 

ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, மாணவர்கள், இறுதி தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, மாணவர்கள் நலன் கருதி, ஒன்று வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க, பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.