சென்னை: 'ஆன்லைன்' வழியில் படிப்புகளை நடத்த, 900 பல்கலைகள் பதிவு செய்துள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உயர் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், பல்வேறு சான்றிதழ் படிப்புகளை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. தேசிய உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான, சென்னை ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றின் வழியாக, ஆன்லைன் வழியில் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதையடுத்து, அனைத்து பல்கலைகளும், கல்லுாரிகளும், ஆன்லைன் வழி படிப்பை கட்டாயம் நடத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்காக, 'ஸ்வயம்' என்ற இணையதளத்தையும் அறிமுகம் செய்தது. இந்த தளத்தில், இதுவரை, 900 பல்கலைகள் பதிவு செய்துள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அவற்றில், 137 பல்கலைகள், ஆன்லைன் படிப்புகளுக்கு பட்டப் படிப்பிலேயே, 'கிரெடிட்' முறை மதிப்பெண் வழங்க துவங்கி உள்ளன. மற்ற பல்கலைகளும், கல்லுாரிகளும், இதை பின்பற்ற வேண்டும் என, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.