சென்னை : பிளஸ் 2 வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் தேர்வில், 34 ஆயிரம் பேர், 'ஆப்சென்ட்' ஆகினர். அவர்களுக்கு, வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 2 முதல், 24 வரை பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வில், 8.5 லட்சம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமோ என்ற குழப்பத்தில், மாணவர்கள் இருந்தனர். 

ஆனால், திட்ட மிட்ட தேதிகளில், தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, மார்ச், 24ல் முடிந்தன.இந்நிலையில், தேர்வின் கடைசி நாளான நேற்று முன்தினம், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அதனால், பலர் தாங்கள் படித்து கொண்டிருந்த பகுதிகளில் இருந்து, குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.எனவே, பிளஸ் 2 தேர்வில், வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களில், 34 ஆயிரம் மாணவர்கள், ஆப்சென்ட் ஆகினர். குறிப்பாக உறைவிட பள்ளிகளின் மாணவர்களில் பலர், இந்த தேர்வை எழுதவில்லை என, கூறப்படுகிறது. 

தேர்வை தவற விட்டவர்களுக்கு, மீண்டும் ஒரு நாள் தேர்வு நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, அவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்துவதற்கு, முதல்வர், இ.பி.எஸ்.,உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, பள்ளி கல்வி துறை செயலர், தீரஜ்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வில், உரிய முடிவுகள் எடுக்கப்பட்டு, தமிழக அரசு அறிவித்துள்ளது.