சென்னை; தமிழகம் முழுவதும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளுக்கு, வரும், 31ம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.


கேரளாவை ஒட்டியுள்ள சில மாவட்டங்களில், ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக பள்ளி கல்வித்துறை, இந்த முடிவை எடுத்துள்ளது. பள்ளி கல்வித்துறை கமிஷனர், சிஜி தாமஸ் வைத்யன் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும், அனைத்து வகை பள்ளிகளிலும், ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, வரும், 16ம் தேதி முதல், 31ம் தேதி வரை விடுமுறை அளிக்க, அரசால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் உட்பட, ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 16ம் தேதி முதல், 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்த சுற்றறிக்கையின் நகல், பள்ளிக்கல்வி, மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ.,யின் சென்னை மண்டல அலுவலகம் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக, பள்ளிக்கல்வி கமிஷனரகம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.