சென்னை:தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், திட்டமிட்டபடி மார்ச் முதல் வாரத்தில் துவங்கின. 
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததால், பரவலை தடுக்க, நாடு முழுவதும், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட பாட திட்டங்களில், பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும், ஏற்கனவே பல பாடங்களுக்கு தேர்வுகள் முடிந்ததால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் தள்ளிவைக்கப்படவில்லை. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும், ஏப்., 15க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளஸ் 2வுக்கான, வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு, நாளை தேர்வு நடக்கிறது. இதனுடன், பிளஸ் 2வுக்கு அனைத்து பாடங்களுக்கான தேர்வுகளும் முடிகின்றன. பிளஸ் 1 மாணவர்களுக்கு, இன்று உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் நடக்கின்றன. வரும், 26ம் தேதி, வேதியியல் கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் தேர்வுகள் நடக்கின்றன. அன்றுடன், பிளஸ் 1 தேர்வுகள் முடிகின்றன. கொரோனா பரவலால், பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வுகள் தள்ளிவைக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.