மதுரை: "பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்தின் கீழ், முதல் தேர்வான தமிழ் மிக எளிமையாக இருந்தது"என மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பிளஸ் 2வில் தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு தலா இரண்டு தாள்கள் இருந்தன. இந்தாண்டு முதல் ஒரே தாளாக மாற்றம் செய்யப்பட்டது. அதுபோல் வினாத்தாள் எவ்வாறு இருக்கும் என்ற முழுமையான புரிதலும் இன்றி அச்சத்துடன் முதல் தேர்வை மாணவர்கள் சந்தித்தனர். ஆனால் வினாக்கள் எளிதாக இருந்தன. நேரடி வினாக்கள் அதிகம் இடம் பெற்றது மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மதுரையில் தேர்வு எழுதியோர் கூறியதாவது: திவ்யா ஸ்ரீ, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி: பள்ளி சார்பில் வழங்கப்பட்ட பெற்றோர் ஆசிரியர் கழக புத்தகத்தில் இரண்டு, மூன்று மதிப்பெண் வினாக்கள் உட்பட பெரும்பாலான வினாக்கள் இடம் பெற்றன. ஒரு மதிப்பெண் வினா 'புக்பேக்'ல் இருந்தே இடம் பெற்றது.

இதனால் வினாத்தாள் அச்சம் முதலில் நீங்கியது. இலக்கணத்தில் 'அணிகள்' பகுதியில் இருந்து இடம் பெறுவதற்கு பதில் 'தினைகள்' பகுதியில் இருந்து கேட்கப்பட்டன. எப்படி வினா கேட்டாலும் எழுதும் வகையில் பள்ளி சார்பில் தயார்படுத்தப்பட்டது கூடுதல் பலனாக இருந்தது.யுவராஜ், இளங்கோ மாநகராட்சி பள்ளி: அனைத்து பகுதியில் இருந்தும் சமஅளவில் வினாக்கள் இடம் பெற்றன. ஒரு மதிப்பெண் பகுதியில் 2 வினா சிந்தித்து எழுதும் வகையில் இருந்தது. பகுதி நான்கில் கேட்கப்பட்ட 'நெகிழியை தவிர்த்து நிலம் உயர்த்து' சுயமாக எழுதும் வினா எளிதாக இருந்தது. செய்யுள் பகுதி வினாக்களும் எளிமையாக இருந்தன.

அர்ச்சனா, மஹா மெட்ரிக் பள்ளி: ஒரு மதிப்பெண் எளிதாக இருந்தாலும், நான்கு மதிப்பெண் பகுதி வினாக்கள் பாடத்தின் உட்பகுதியில் இருந்து இடம் பெற்றது சிறிது திணறலாக இருந்தது. 'கருத்து படத்தை புரிந்து பத்தியாக எழுது' என்ற புதிய வகை வினா அனைத்து மாணவர்களும் எளிதில் எழுதும் வகையில் இருந்தது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் இடம் பெற்ற பெரும்பாலான வினாக்கள்வந்திருந்தன. வினாக்களை பார்த்தவுடன் புதிய வினாத்தாள் என்ற அச்சம் இல்லாமல் எழுதும் மனநிலை இருந்தது.

சுஜிதா, ஜோதி மெட்ரிக் பள்ளி: முதல் ஐந்து பாடங்களில் இருந்து அதிக வினாக்கள் இடம் பெற்றன. எளிதில் எழுத முடிந்தது. இரண்டு, நான்கு மதிப்பெண் வினா 'புக்பேக்'கில் இருந்து நேரடியாக கேட்கப்பட்டன. கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட சிறப்பு கையேட்டில் இருந்து அதிக வினாக்கள் இடம் பெற்றன. கடின வினா என எதுவும் கூற முடியவில்லை. அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் இடம் பெற்ற வினாக்கள் பெரும்பாலும் இடம்பெற்றதால் மொத்தம் 90 மதிப்பெண்ணிற்கு 80க்கு மேல் எளிதில் பெறமுடியும்.

ராஜ்குமார், தமிழாசிரியர், யு.சி., பள்ளி: மாணவர்கள் போல் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் எப்படி இருக்கும் என்ற மனநிலை தான் இருந்தது. ஆனால் சுமாராக படிக்கும் மாணவரும் அதிக மதிப்பெண் பெறும் வகையில் அமைந்துள்ளது. மொத்தம் 90 மதிப்பெண்ணில் 70 மதிப்பெண்ணிற்கு நேரடி வினா இடம் பெற்றுள்ளன. 20 மதிப்பெண்ணிற்கான வினாக்கள் 'புக்பேக்'கில் பயிற்சி பகுதியில் இருந்து வந்துள்ளன.

மொத்தம் 90ல், உரைநடையில் 26, செய்யுள் பகுதியில் 32, துணை பாடம், இலக்கணம், மொழிப் பயிற்சியில் 26 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெற்றன. முந்தைய வினாத்தாளில் துணை பாடத்தில் 20 மதிப்பெண்ணுக்கு பதில் தற்போது எட்டு மதிப்பெண்ணுக்கு வினா கேட்கப்பட்டுள்ளது.