தேனி : மாணவர்களிடம் மரம் வளர்ப்பை ஊக்குவிக்க ஆயிரம் பள்ளிகளில் தோட்டக்கலை மன்றம் துவக்க ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கையை பாதுகாக்கும் சிந்தனையை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் மாநிலம் முழுவதும் அரசு, உதவி பெறும் ஆயிரம் பள்ளிகளில் தோட்டக்கலை மன்றம் துவக்க தோட்டக்கலை துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க தோட்டக்கலை துறை ரூ. ஒரு கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தோட்டக்கலை மன்றம் அமைக்கும் பள்ளிக்கு முதல் ஆண்டில் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். இதில் மண் வெட்டி, கடப்பாறை போன்ற பண்ணை கருவிகள் ரூ. 2 ஆயிரத்திற்கும். விதைகள், நாற்றுக்கள், காய்கறி செடிகள் வாங்க ரூ.2 ஆயிரம், மன்ற விளம்பர பலகை தயார் செய்ய இதர செலவு என ரூ. ஆயிரம் ஒதுக்கப்படுகிறது.

இதே போல் இரண்டாம் ஆண்டிலும் ரூ. 5 ஆயிரம் நிதி வழங்கப்படும்.பள்ளி 100 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் சிறிய காய்கறி தோட்டம், சிறிய நர்சரி மூலிகை செடிகள் வளர்க்க வேண்டும். மாணவர் நர்சரியில் இருந்து நாற்றுக்கள் பெற்று பொதுமக்களுடன் இணைந்து பெரியஅளவில் மரக்கன்றுகளை நடவு செய்யும் நிகழ்ச்சி நடத்த வேண்டும். இம் மன்றத்தில் உள்ள மாணவர்களை அருகில் உள்ள தோட்டக்கலை, வேளாண் பண்ணைகளுக்கு அழைத்து செல்லவும் தோட்டக்கலை துறை உத்தரவிட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் 35 பள்ளிகள் இத் திட்டத்தில் தேர்வாகியுள்ளது என தோட்டக்கலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.