சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்க உள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வழக்கமாக மார்ச்சில் துவங்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே, இன்று துவங்க உள்ளது. 

நாடு முழுவதும், 5,000 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.இதில், மூன்றாம் பாலினத்தவர் ஆறு பேர், 5.22 லட்சம் மாணவியர் உட்பட, 12 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டை விட, 80 ஆயிரம் மாணவர்கள் குறைவாகவே பங்கேற்கின்றனர்.முதற்கட்டமாக, இன்று முதல், விருப்ப பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. வரும், 28 முதல், முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் நடக்கும். எவ்வித முறைகேடும் இல்லாமல் தேர்வை நடத்த, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. தேர்வுக்கு, பள்ளி சீருடை அணிந்து வரும்படி, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.