தர்மபுரி: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க கூட்டம், தர்மபுரியில் நடந்தது. இதில் பங்கேற்ற, அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜாக்டோ - ஜியோ சார்பாக, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2019ல் தொடர் போராட்டம் நடந்தது. அப்போது, முதல்வர் பழனிசாமி எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தார். 

இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. அதன் பின் இதுவரை, கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்ட, நான்கு லட்சத்து, 50 ஆயிரம் பேருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடினர். இதில், 5,000க்கும் மaேற்பட்டோர் மீது, 17-பி, குற்ற குறிப்பாணை, 1,500 பேர் பணிமாறுதல் என்ற பழிவாங்கும் போக்கை கைவிடவேண்டும் என, வலியுறுத்தி அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தினோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிர்வாகிகளை அழைத்து பேசி, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மாநில தலைவர் அன்பரசு, துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட தலைவர் சுருளிநாதன், செயலாளர் சேகர் உட்பட பலர் உடனிருந்தனர்.