தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் ;  புதிய திட்டத்துக்கு அரசு ஒப்புதல்

சொத்து விற்பனை பதிவு முடிந்த பின், தானியங்கி முறையில், பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் நடைமுறைக்கு, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான அரசாணையை, வருவாய் துறை பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில், வீடு, மனை போன்ற அசையா சொத்துக்கள் வாங்கியோரிடம், பத்திரம் பதிவு செய்யும் போது, பட்டா மாறுதலுக்கும் விண்ணப்பம், கட்டணம் பெறப்படுகிறது. ஆனால், பதிவுத்துறை அளிக்கும் விபரங்கள் அடிப்படையில், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, தாலுகா அலுவலக அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை. உத்தரவுபத்திர பதிவுக்கான, 'ஸ்டார் - 2.0' சாப்ட்வேர், வருவாய் துறையின், 'தமிழ் நிலம்' சாப்ட்வேருடன் இணைக்கப்பட்டு உள்ளது. 

இதனால், சொத்து விற்பனை பத்திரப்பதிவு விபரங்கள் அடிப்படையில், பட்டாவில் பெயர் மாற்றத்தை, தானியங்கி முறையில் செயல்படுத்த முடியும். இதை முறையாக செயல்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.இதுதொடர்பாக, வருவாய் துறை பிறப்பித்துள்ள அரசாணை:உட்பிரிவு செய்ய வேண்டிய தேவை இல்லாத, சொத்து பரிமாற்றத்தில், பட்டா பெயர் மாற்றத்துக்கு, கிராம நிர்வாக அலுவலர், மண்டல துணை வட்டாட்சியர் ஒப்புதல் தேவை.அதற்கு பதிலாக, அதிகாரிகள் ஒப்புதல் இன்றி, பத்திரப்பதிவு விபரங்கள் அடிப்படையில், பட்டாவில் பெயர் மாற்றம்செய்யப்படும். அறிமுகம்


இந்தப் பணிகள், தானியங்கி முறையில் கணினியில் மேற்கொள்ளப்படும். நில அளவை, பதிவுத்துறை, வருவாய் துறை ஒப்புதலுடன், முதலில் ஒரு தாலுகாவில், இத்திட்டம் துவங்கப்படும்.பின், படிப்படியாக அனைத்து தாலுகாக்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.ஒரே நபர் பெயரில் உள்ள முழு பரப்பளவு சொத்தும், இன்னொரு நபர் பெயருக்கு மாற்றப்படும் நிகழ்வுகளுக்கு மட்டும், இத்திட்டம் அறிமுகம் செய்யப்படும். அதன்பின், ஒன்றுக்கு மேற்பட்ட நபர் இணைந்து வாங்கும் சொத்துக்களுக்கும் விரிவு படுத்தப்படும்.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.