சென்னை : மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து பள்ளிகளிலும், ஒரே காலகட்டத்தில் தான், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். 


ஆண்டு இறுதி தேர்வு முடிந்ததும், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, ஒவ்வொரு வகுப்பிலும், புதிய மாணவர்களை சேர்க்கலாம்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து, அதன் தேர்வு முடிவுகளும், மதிப்பெண்ணும் வந்த பின், மாணவர்கள் தங்கள் நிலையை தெரிந்து கொள்வர். அப்போது தான், அவர்கள் விரும்பும் பாட பிரிவுகளில், பிளஸ் 1 வகுப்புக்கான சேர்க்கையை நடத்த வேண்டும். அந்த வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஜூன் மாதம் தான், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 

தனியார் பள்ளிகளும், இந்த விதிகளையே பின்பற்ற வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகள் முன்கூட்டியே விண்ணப்பங்களை விற்று, 'புக்கிங்' செய்யும் பணிகளை துவக்கியுள்ளன. மேலும், ஓராண்டுக்கான கட்டணத்தையும் உடனே செலுத்தும்படி, மாணவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் உள்ள மெட்ரிக் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. தனியார் பள்ளி நிர்வாகங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ள, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர், இந்த பிரச்னைகளை கண்டும்காணாமல் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. 

அரசு பள்ளிகள், பிளஸ் 1 சேர்க்கையை மேற்கொள்ளும் காலத்திலேயே, தனியார் பள்ளிகளும் மேற்கொள்ள வேண்டும். ஆனால், 'ரெசிடென்ஷியல்' எனப்படும், பல உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், தற்போதே மாணவர்களை சேர்த்து, பிளஸ் 1 சேர்க்கையை இறுதி செய்கின்றன. அதனால், 10ம் வகுப்பில், எந்த பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவோம் என்று தெரியாமலேயே, பிளஸ் 1ல் பாட பிரிவை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு, மாணவர்கள் ஆளாகியுள்ளனர். 

வழக்கமான காலத்தை விட, நான்கு மாதங்களுக்கு முன், 'அட்மிஷன்' பெற வேண்டியுள்ளதால், அதற்கான கட்டணம் முழுவதையும், பள்ளிகளுக்கு முன்கூட்டியே செலுத்த, பெற்றோர்கள் நிர்பந்தம் செய்யப்படுகின்றனர். இதை பள்ளிக்கல்வி அமைச்சரும், அதிகாரிகளும் தடுத்து, விதிமீறல் இன்றி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.