புதுடில்லி: பள்ளிக் கல்வி துறையில் காலியாக உள்ள, வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப, இன்று போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தமிழகம் முழுவதும், 57 மையங்களில், ஆன்லைன் வழியில், இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இது, கணினி தேர்வாக நடந்தாலும், தேர்வின் வினாக்களுக்கு குறிப்பெடுக்க பேனா பயன்படுத்தப்படுகிறது.

அதற்காக, சில தேர்வர்கள் பேனாவை எடுத்து வருவதாக கூறி, அதில், 'ப்ளூ டூத், வைபை' மற்றும் டிஜிட்டல் வசதிகள் உள்ள பேனாவை எடுத்து வந்து, முறைகேட்டில் ஈடுபட்டு விடாமல் கண்காணிக்க வேண்டும் என, கண்காணிப்பாளர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., போல, ஏதாவது வித்தியாசமான பேனாவை பயன்படுத்தி விடக்கூடாது என்பதால், தேர்வர்கள் யாரும் பேனா எடுத்து வரக்கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் பேனா மற்றும் பென்சில் வழங்கப்படும். அதை தேர்வு முடிந்ததும், திரும்ப ஒப்படைக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. 

தேர்வுக்கு புகைப்படம் ஒட்டிய, 'ஹால் டிக்கெட்' மற்றும் அரசு அங்கீகரித்த அசல் அடையாள அட்டையை மட்டும் எடுத்து வர வேண்டும். ஷூ, சாக்ஸ், பெல்ட் மற்றும் ஆபரணங்கள் அணிந்து வரக்கூடாது. மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எடுத்து வரவும் அனுமதியில்லை என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.