சென்னை:'பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மாணவ - மாணவியருக்கு போட்டிகள் நடத்த வேண்டும்' என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் மாணவியரின் கல்வி தொடர்பாக, பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப் படுகிறது. 

இதன்படி, பெண்களுக்கு கல்வி வழங்குவது தொடர்பாகவும், அவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது, சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, 'இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையிலும், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவ - மாணவியருக்கு போட்டிகள் நடத்த வேண்டும். 'ஓவியம், கட்டுரை, கவிதை, வினாடி - வினா போட்டிகள் நடத்தி, அதன் அறிக்கையை, பள்ளிக்கல்வி துறைக்கு அனுப்ப வேண்டும்' என, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.