இன்ஜி., தேர்விலும் முறைகேடா?


சென்னை: டி.என்.பி.எஸ்.சி., நடத்திய இன்ஜினியர் பதவிக்கான தேர்விலும் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம், வேளாண்மை, நெடுஞ்சாலை, மீன் வளம் மற்றும் துறைமுக பணிகள் துறைகளில் உதவி இன்ஜினியர் உள்பட 10 பதவிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வு நடத்தியது. 2019 ஆகஸ்ட் 10ல் தேர்வு நடந்தது. தேர்வின் முடிவுகள் நவம்பர் 13ல் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரி 24ல் நேர்முக தேர்வுகள் முடிந்தன. குரூப் - 4 தேர்வு செப். 1ல் முடிந்த நிலையில் அதற்கு 20 நாட்களுக்கு முன்னர் தான் இன்ஜினியரிங் பதவி தேர்வு நடந்தது. 

அதேபோல் குரூப் - 4 தேர்வு முடிவு வெளியான நவ. 12க்கு மறுநாளான 13ல் இன்ஜினியரிங் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. இந்த தேர்விலும் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தேர்வர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.சரியாக தேர்வு எழுதாத பலர் 'ரேங்க்' பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

குரூப் - 4 தேர்வை போல் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய பலரின் மதிப்பெண் வரிசையாக 'ரேங்க்' பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.