போலீஸ் பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: காவல் துறையில் காலியாக உள்ள, 8,826 பணி இடங்களை நிரப்புவதற்காக நடந்த, தேர்வின் முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.
காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, இரண்டாம் நிலை காவலர்களாக, 8,826 பேரை தேர்வு செய்வது குறித்து, 2019 மார்ச், 6ல், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்தது. இப்பணிகளுக்கு, ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கையர் என, ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதற்கான எழுத்து தேர்வு, 2019 ஆகஸ்டில் நடந்தது. தேர்வில், 3.22 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன்பின், 15 மையங்களில், உடற்தகுதி தேர்வு, உடற்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன; சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன.

இதையடுத்து, மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை பிரிவுக்கு, 2,410 பேர்; சிறப்பு படைக்கு, 5,962, சிறைத்துறைக்கு, 210 மற்றும் தீயணைப்பு துறைக்கு, 191 பேர் என, 8,773 பேர், தற்காலிகமாக இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 2,432 பேர் பெண்கள் மற்றும் திருநங்கையர்.தேர்வின் முடிவுகள், சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின்,www. tnusrbonline. org என்ற, இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டுள்ளன.