சென்னை:தேர்வு அறைகளில், சுவர் கடிகாரம் கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 2; பிளஸ், 1 தேர்வு, மார்ச், 4; 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 17ல் துவங்க உள்ளன.தேர்வு பணிகள் தொடர்பாக, தேர்வு மைய தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பல்வேறு விதிகள் அடங்கிய சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதன்படி, அரசு தேர்வு துறை வழங்கிய கையேட்டில், பொதுத் தேர்வு மையங்களில், சுவர் கடிகாரம் பொருத்த வேண்டியது கட்டாயம் என, கூறப்பட்டுள்ளது. 'தேர்வு மையத்தின், நுழைவு வாயில் மற்றும் தேர்வு அறைகளில், சுவர் கடிகாரம் கட்டாயம் இருக்க வேண்டும். 
'அந்த கடிகாரங்கள் அனைத்தும், எந்த வித்தியாசமும் இன்றி, பொதுவான நேரத்தை காட்ட வேண்டும்; ஒன்றுக்கொன்று வேறுபடக் கூடாது. 'அவை நல்ல நிலையில் இயங்குவதாக இருக்க வேண்டும். இந்த கடிகார நேரத்தின்படியே, தேர்வு நடத்தப்பட வேண்டும்' என, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.