மதுரை: அரசு உத்தரவிட்டும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்குவதில் நிதித்துறை இழுத்தடிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழகத்தில் சத்துணவு திட்டம், அங்கன்வாடி மையங்களில் பணியாற்றிய தகுதியானவர்களை பட்டதாரி ஆசிரியர்களாகவும், அங்கன்வாடி பணியாளர்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோரை மகளிர் நல அலுவலர், சமுதாய ஊட்டச்சத்து மேற்பார்வையாளராகவும் 1982 முதல் 2620 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

இவர்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சத்துணவு திட்டத்தில் பணியாற்றி பெரும்பாலோனர் ஓய்வு பெற்றனர். ஆனால் தகுதியிருந்தும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

பல்வேறு போராட்டங்கள் நடத்தியதால் மாதம் இரண்டாயிரம் ரூபாய் சிறப்பு ஓய்வூதியம் வழங்க 2019 ஆக.,28ல் அரசு உத்தரவிட்டது. ஆனாலும் தற்போது வரை சிறப்பு ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை.

தமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் சங்கம் மாநில தலைவர் சங்கர்பாபு கூறியதாவது: போராட்டங்கள் நடத்தி பெறப்பட்ட அரசு உத்தரவு பல மாதங்களாக மதிக்கப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் 'நிதித்துறையால் கணக்கு தலைப்பு துவங்கப்படவில்லை' என்கின்றனர். ஓய்வு பெற்ற பலர் வயது மூப்பிலும் வாழ்வாதாரமின்றி குடும்பத்துடனும் அவதிப்படுகின்றனர். மருத்துவ செலவிற்கு திண்டாடுகின்றனர். முதல்வர் பழனிசாமி தலையிட்டு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.