புதுச்சேரி:பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பிரச்னையை தீர்த்து வைத்த, முதல்வர் நாராயணசாமிக்கு, ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் மனோகரன், பொதுச் செயலாளர் பாரி, பொருளாளர் சிரில், கூட்டமைப்பு தலைவர் பாலகுமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தற்போது 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது, முன்னதாக நடைமுறையில் இருந்த 6வது ஊதியக்குழு பரிந்துரையில், புதுச்சேரி அரசு பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களில் நேரடியாக நியமனம் பெற்றவர்களுக்கும், பதவி உயர்வு மூலம் பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது.

இதை களைய வலியுறுத்தி, புதுச்சேரி அரசுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கவுரவத் தலைவர் சேஷாச்சலம் தலைமையில், முதல்வர் நாராயணசாமி, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் பேசப்பட்டது. இதன் விளைவாக, தற்போது புதுச்சேரி அரசு நிதி செயலகம், ஊதிய முரண்பாடுகளை களைய தேவையான ஆணையை பிறப்பித்துள்ளது.

இதனால் 500க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பயனடைவர். சங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்றி நடைமுறைப்படுத்திய முதல்வர், கல்வி அமைச்சர், தலைமைச் செயலர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.