சேலம்:அரசு பள்ளிகளில், ஒன்பது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'ஆன்லைன் டெஸ்ட்' நடத்துவதில், 'சர்வர்' கோளாறு, இணைய வேகமின்மையால், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்பது, 10ம் வகுப்பு மாணவர்கள், கணினி வழித்தேர்வில் அனுபவம் பெற, 'ஆன்லைன் டெஸ்ட்' நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொருவருக்கும், தனித்தனியே யூசர் ஐ.டி., - பாஸ்வேர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு குழுவுக்கு, 10 பேர் வீதம், ஒன்றரை மணி நேர தேர்வெழுத உத்தரவிடப்பட்டிருந்தது. சேலம் மாவட்டத்தில், இரு நாளாக, தேர்வு நடந்து வருகிறது. 

இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

அரசு பள்ளிகளில், 2 எம்.பி., வேகத்தில் மட்டும், இணையதள இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், 10 கணினிகள் பகிர்ந்து கொள்ளும்போது, இணைய சேவையை பயன்படுத்த முடிவதில்லை. இந்நிலையில், 'ஆன்லைன் டெஸ்ட்' நடத்துவதில், 'சர்வர்' கோளாறுகளும் ஏற்படுகின்றன. இதனால், நாள் முழுதும் காத்திருந்தாலும், ஒரு குழு மாணவர்களுக்கு கூட, டெஸ்ட் நடத்த முடிவதில்லை. 

இதை தவிர்த்து, மற்றவர்களுக்கு திருப்பத்தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது பிளஸ் 2 வகுப்புக்கு, செய்முறை தேர்வு தொடங்கவுள்ள நிலையில், ஆன்லைன் டெஸ்ட் எழுத காத்திருப்பதால், மாணவர்கள், ஆசிரியர்களின் நேரம் விரயமாகிறது. பொதுத்தேர்வுக்கு தயாராவதில் தொய்வு ஏற்படுகிறது. 

ஆன்லைன் டெஸ்ட் நடத்த வேண்டும் எனில், முதலில், அதற்கேற்ப வசதி வாய்ப்புகளை உருவாக்கிவிட்டு அறிவிக்க வேண்டும். அரை குறை வசதிகளில், நடைமுறைப்படுத்த உத்தரவிடுவதால், மாணவர்கள், ஆசிரியர்கள்தான் அவதிக்குள்ளாகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.