சென்னை,:பள்ளி ஆசிரியராக, 25 ஆண்டுகள் புகாரின்றி பணியாற்றினால், 2,000 ரூபாய் வெகுமதி வழங்கப்படும்' என, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், சிறப்பாக செயல்படும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் அமல்படுத்தப் படுகின்றன. கனவு ஆசிரியர் திட்டம், நல்லாசிரியர் விருது போன்ற திட்டங்களில், விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், 25 ஆண்டுகள் புகாரில்லாமல் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு, 2,000 ரூபாய் வெகுமதி அளிக்கும் திட்டத்தை, பள்ளிக்கல்வி துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம், சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் செயல்படுத்தப்படுகிறது. 'பள்ளிகளுக்கு நேரம் தவறாமல் வருவது, பாட வேளைகளை, 'கட்' அடிக்காமல் இருப்பது, தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் உத்தரவுகளை சரியாக பின்பற்றுவது என, சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு, இந்த வெகுமதி வழங்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.