தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வு இன்று துவங்குகிறது. தேர்வில், 4.5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

தமிழக பள்ளி கல்வியின் சமச்சீர் கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கும், பொது தேர்வுக்கான செய்முறை தேர்வு, இன்று துவங்க உள்ளது. மாநிலம் முழுவதும், 3,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில், செய்முறை தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் மேல்நிலை பள்ளிகளின் ஆய்வகங்கள், தேர்வு மையங்களாக செயல்படுகின்றன. தேர்வுக்கான பணிகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களும், அரசு தேர்வு துறை உதவி இயக்குனர் அலுவலகங்களும் மேற்கொண்டுள்ளன. தேர்வு மையங்களில், பிற பள்ளிகளை சேர்ந்த மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், புறத்தேர்வு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அவர்களை பல்வேறு பிரிவுகளாக பிரித்து, ஐந்து வகையான செய்முறை வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன.

செய்முறை தேர்வில் புத்தகத்தை பார்த்து, ஆய்வக செயல்பாடுகளை மேற்கொள்ளாமலும், காப்பி அடிக்காமலும், முறைகேடுகளின்றி தேர்வை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள, மாவட்ட அளவில் பறக்கும் படைகள் அமைக்கப் பட்டுள்ளன. தகுதி இல்லாத மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க, சில தனியார் பள்ளிகள் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும், தனியார் பள்ளிகளுக்கு சாதகமானவர்களை, கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படையில் நியமிப்பது, செய்முறை தேர்வில் மாணவர்களின் செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு, பள்ளி கல்வியின் சில ஊழியர்கள் துணை போகலாம் என்றும் கூறப்படுகிறது.எனவே, குறிப்பிட்ட தனியார் பள்ளிகளின் வியாபார நோக்கத்துக்கு வளைந்து கொடுக்காமல், தேர்வை முறைகேடின்றி நடத்த வேண்டும். 

டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு போன்று தமிழக கல்வி தரத்தை குறைக்கும் தில்லுமுல்லுகள், பிளஸ் 2 பொது தேர்விலும், செய்முறை தேர்விலும் அமைந்துவிடக் கூடாது.சமூக வலைதளங்களில், வினாத்தாள் லீக் ஆகாமல், கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.