சென்னை:'பொதுத் தேர்வுகளில், எந்த வகையிலான வினாக்கள் இடம் பெறும்' என, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்குனரகம் சார்பில், பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பிய சுற்றறிக்கை:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், வினாத் தாள் கட்டமைப்பு என்ற, 'ப்ளூ பிரின்ட்' இல்லாமல், வினாத்தாள் இடம் பெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய பாட திட்டம் அமல்பத்தாம் வகுப்புக்கு நடப்பு கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அமலாகியுள்ளது. 'புத்தகம் முழுமையும் படித்து, புரிந்து, விடையளிக்கும் வகையில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்' என, பள்ளிகளுக்கு முன்பே அறிவுறுத்தப்பட்டுள்ளது.வினாத்தாள் கட்டமைப்பு இல்லை என்பதால், எந்த பாடத்தில் இருந்தும், எந்த வகையிலும் வினாத்தாள் தயாரிக்கப்படும். இந்த வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதற்காகவே, மாதிரி வினாத்தாள் வெளியிடப் பட்டுள்ளது. மாதிரி வினாத்தாளில் இடம் பெற்றுள்ள வினா வகைகளே இடம் பெற வேண்டும் என, கட்டாயமில்லை. 
உரிமை கோர இயலாதுமாதிரி வினாத்தாளில் ஒவ்வொரு பகுதியிலும், ஒதுக்கப்பட்டுள்ள மதிப்பெண்களில் மட்டும் மாற்றம் இருக்காது. ஆனால், ஒவ்வொரு பகுதியிலும் கேட்கப்படும் வினாக்கள் எந்த வடிவிலும் இருக்கும்.வினாத்தாள் கட்டமைப்பு தேவையில்லை என்பது, அரசின் கொள்கை முடிவு. எனவே, மாதிரி வினாத்தாளில் உள்ளதை போன்று, வினாக்களை கேட்க வேண்டும் என, மாணவர்கள், ஆசிரியர்கள் உரிமை கோர இயலாது. புதிய பாட திட்டத்தில் கட்டமைப்பு முறை இல்லாததால், எந்த வகையான வினாக்களும் கேட்கப்படலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.