கோவை :இணையதள வேகம் குறைவாக இருந்ததால் ஆன்லைன் முறையிலான நாட்டமறிதல் தேர்வில் மாணவர்களால் விடையளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஒன்பது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வியில் எந்த படிப்பில் ஆர்வமுள்ளது என்பதை அறிய நாட்டமறிதல் தேர்வு நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது.இத்தேர்வில் மதிப்பெண் வெளியிடாமல் பாடவாரியாக மாணவர்களின் ஆர்வத்தை அறியும் நோக்கில் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படுகிறது.இதற்கு இணையதள வேகம் 5 mbps இருக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால் இயக்குனரகத்தில் இருந்து அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் இண்ட்ராநெட் சேவையில் 2 mbps இணையதள வேகமே உள்ளது. அலுவலக பயன்பாட்டிற்கான இணையதள வசதியும் குறைந்த வேகம் கொண்டதால் மாதிரி ஆன்லைன் தேர்வு பள்ளிகளில் நடத்த முடியாத நிலை நீடித்தது.இதுகுறித்து இயக்குனரத்திற்கு தகவல் அளித்தும் இணையதள வேகத்தை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் நேற்று அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 'ஆப்டிட்யூட்' எனும் நாட்டமறிதல் தேர்வு துவங்கியது.கோவை மாவட்டத்தில் பல பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே நேற்றைய தேர்வில் பங்கேற்றனர். இணையதள வேகம் குறைவாக இருந்ததால் 90 நிமிடங்களில் 90 வினாக்களுக்கு விடையளிக்க இயலவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில் ' இணையதள வேகம் குறைவாக இருந்ததால் பல மாணவர்களால் 40 கேள்விகளுக்கு கூட 90 நிமிடங்களில் பதில் அளிக்க இயலவில்லை. கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதால் அனைத்து மாணவர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வை கொண்டு மாணவர்களின் உயர்கல்வி ஆர்வத்தை அறிவதில் சிக்கல் உள்ளது ' என்றனர்.