அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு திடீரெனபழைய நிறத்தில் இலவச சீருடை வழங்கப்பட்டுள்ளது. ஒரே கல்வியாண்டில் சீருடையை இருமுறை மாற்றியதால் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 40.66 லட்சம்மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 4 ஜோடி சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் (2019-20) இலவச சீருடைகளின் மாடல் மாற்றப்பட்டுள்ளது.

ஒன்றுமுதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கரும்பச்சை நிற கால்சட்டை, இளம்பச்சை நிற கட்டமிடப்பட்ட மேல்சட்டையும் வழங்கப்பட்டுள்ளன.6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சந்தனநிறகால் சட்டை, சந்தன நிற கட்டமிடப்பட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு கூடுதலாக சந்தன நிற மேல் கோட்டும் வழங்கப்பட்டன.

மொத்தம் 4 ஜோடிகளில் ஏற்கெனவே 3 ஜோடிகள்மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது கடைசி ஜோடி சீருடை வழங்கப்பட்டு வருகிறது. இதில் திடீரென 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒரே கல்வியாண்டில் 2 முறை சீருடைகளை மாற்றியதால், மாணவர்கள், பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஏற்கெனவே இலவச சீருடைகள் தயாரிப்புக்கான ஒப்பந்த ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடியால் 2 மாதங்கள் தாமதமாக தான் மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் பள்ளி முடிய இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கடந்த கல்வியாண்டுக்குரிய சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பெற்றோர் சிலர் கூறும்போது, ‘பலர் சொந்த செலவில் தங்களது குழந்தைகளுக்கு சீருடைகளை தைத்துக் கொடுத்தனர். தற்போது திடீரென பழைய மாடலில் சீருடை வழங்கியுள்ளனர். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.