சென்னை :'தேர்வுகளில், இது போன்ற தவறுகள் மட்டுமின்றி, வேறு எந்த தவறும் நிகழாதவாறு, தகுந்த சீர்திருத்த நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், 2019ல் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வில், முறைகேடு நடந்த செய்தி அறிந்ததும், தேர்வாணையம் தாமாக முன்வந்து, விசாரணை நடத்தியது. தவறு நடந்திருப்பது உறுதியானதும், மேல் விசாரணைக்காக, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.தகுதி வாய்ந்த தேர்வர்கள், விரைவில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.

நடவடிக்கைகடந்த, 2017ல் நடந்த, 'குரூப் - 2 ஏ' பணிகளுக்கான தேர்விலும், தவறு நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குற்றவியல் நடவடிக்கை எடுக்க, உரிய ஆவணங்களை போலீசாரிடம் தேர்வாணையம் ஒப்படைத்துள்ளது.அதைத் தொடர்ந்து, மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்விலும், தவறு நடந்திருப்பதால், அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அந்த தேர்வை பொறுத்தவரை, முன் அனுபவ சான்றிதழ் சரிபார்ப்பு, போக்குவரத்து துறை சார்பில் செய்யப்பட்டது. அத்துறை அளித்த விபரங்கள் அடிப்படையில், 33 பேருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன.முன் அனுபவ சான்றிதழ் சரிபார்ப்பில், தவறு நடந்துள்ளதாகக் கூறி, இப்பணியை மறு ஆய்வு செய்ய, போக்குவரத்து துறைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்வாணையம் வெளியிட்ட முடிவுகள் குறித்து, எவ்வித ஐயப்பாடும் எழுப்பப்படவில்லை.ஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வு முடிவுகளில், அடுத்தடுத்த பதிவெண்கள் உடையவர்கள், தஞ்சாவூர் தேர்வு மையத்தில் இருந்து, அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக, சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இது குறித்து, தேர்வாணையம் ஆய்வு மேற்கொண்டது. அதில், எந்த தவறும் நடக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தவிர, 2019ல் நடந்த, 'குரூப் - 1' தேர்வில், முதல் இரண்டு இடங்களை பெற்றவர்கள், இறுதியாக தேர்வு பெற்ற, 181 தேர்வர்களில், 150 பேர், ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் என, செய்தி வெளியாகி உள்ளது. இதில், எவ்வித முறைகேடும் நடக்கவில்லை. தேர்வு முடிவுகள் வெளிவந்த, ஒரு வாரத்திற்குள், பல்வேறு பயிற்சி மையங்கள், தங்கள் மையங்களில் இருந்து, தேர்ச்சி பெற்றுள்ளதாக அளித்துள்ளவர் எண்ணிக்கை, 300ஐ தாண்டும். 

பயிற்சி மையங்கள் அளிக்கும் விளம்பரங்களில், ஒரே தேர்வரை, ஒன்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள், உரிமை கோரும் போக்கு உள்ளது.தேர்வாணையம் உறுதிமுறையாக புகார்கள் எதுவும் பெறப்படாமலே, ஊடகங்களில் வந்த செய்தி அடிப்படையில், தேர்வாணையம் விசாரணை செய்தது. முகாந்திரம் உள்ள இனங்களில், உரிய விசாரணைக்கு ஆவன செய்துள்ளது.இனி வரும் காலங்களிலும், புகார்கள் வரும் போது, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதுடன், வெளிப்படையான ஆய்வுகள் மேற்கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில், தேர்வாணையம் உறுதியாக உள்ளது.தேர்வர்கள், தங்கள் பொறுப்பை உணர்ந்து, நேர்மையான வழிகளில் மட்டும், தேர்வை எதிர்கொள்ள வேண்டும். எவ்வித முறைகேடுகளுக்கும், துணை போகாமல் இருக்க வேண்டும். இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். இது குறித்து தகவல் தெரிய வரும்போது, தேர்வாணையம் கவனத்திற்கு கொண்டு வரவும்.யூகங்கள் அடிப்படையில் வரும் சில செய்திகளை கண்டு அச்சமடையாமல், தேர்வாணையத்தின் ஒளிவு மறைவற்ற நடவடிக்கைகள் மீது, முழு நம்பிக்கை வைக்கவும். இனி வரும் காலங்களில், இது போன்ற தவறுகள் நிகழாதவாறு, சீர்திருத்த நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.