டி.என்.பி.சி., தேர்வு, 99 பேர்,தகுதி நீக்கம்!
சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4' தேர்வில், மெகா மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்வு எழுதிய, 99 பேர், தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்திய விசாரணையில், கீழக்கரை, ராமேஸ்வரம் தாசில்தார்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 9,398 பணியிடங்களை நிரப்ப நடந்த, குரூப் - 4 தேர்வில், பெரும் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது குறித்து, நம் நாளிதழ் உள்ளிட்ட பத்திரிகைகளில், செய்திகள் வெளியாகின. முறைகேடு


உடன், டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி சுதன், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி ஆகியோர் தலைமையிலான குழு, நேரடி விசாரணை நடத்தியது. போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில், இந்த விசாரணை நடத்தப்பட்டது.தேர்ச்சி பட்டியலில் முதல், 100 இடங்களை பிடித்த தேர்வர்களுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு, சென்னை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார், சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்களின் விசாரணையில், மெகா மோசடி நடந்தது உறுதியாகியுள்ளது. தேர்வு எழுதியோரில், 99 பேர், முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; அரசு பணிக்கான தேர்வு எழுத, வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

முறைகேட்டில் ஈடுபட்ட, 99 பேரையும், அவர்களுக்கு உதவிய இடைத்தரகர்களையும், வருவாய் துறை மற்றும் அரசு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களையும் கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இடைத்தரகர் ஆதிக்கம்
டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட, 9,398 பணியிடங்களுக்கு, 2018 செப்., 1ல், குரூப் - 4 தேர்வு நடந்தது. தேர்வில், 16 லட்சத்து, 29 ஆயிரத்து, 865 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், நவம்பர், 12ல் வெளியிடப்பட்டன. இதில், 24 ஆயிரத்து, 260 பேர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் பட்டனர். இந்நிலையில், தேர்வில் முறைகேடு நடந்துள்ளதும், இடைத்தரகர்கள் தலையீடு இருந்ததும் தெரிய வந்தது.ஜன., 5ல், சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும், செய்திகள் வெளியாகின. 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள், குரூப் - 4 தேர்வு தேர்ச்சி பட்டியலில், முதல், 100 இடங்களை பிடித்தது தெரிய வந்தது. சிறப்பு மை
இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய துவக்க விசாரணையில், 99 தேர்வர்கள், இடைத்தரகர்களின் ஆலோசனையில், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களை தேர்வு செய்ததாக தெரிவித்தனர். மேலும், சில மணி நேரங்களில் மறையக்கூடிய, சிறப்பு மையால் ஆன பேனாக்களை, தேர்வில் பயன்படுத்தியதாகவும், அந்த பேனாக்களை, இடைத்தரகர்களிடமிருந்து பெற்றதாகவும், அவர்கள் கூறினர். 

இதையடுத்து, தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த, அரசு ஊழியர்கள் சிலரின் துணையுடன், 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் சரியான விடைகள் எழுதப்பட்டன. இதன் காரணமாக, 39 பேர், தேர்ச்சி பட்டியலில், முதல், 100 இடங்களுக்குள் வந்துள்ளனர்.இத்தேர்வு குறித்து தேர்வாணையம் சார்பில், சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் தீவிர ஆய்வு செய்யப்பட்டன. 

சம்பந்தப்பட்ட தேர்வுக்கூடங்கள் மற்றும் கருவூலங்களில், கள ஆய்வு செய்து, நேரடி விசாரணை நடத்தப்பட்டது.தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த, அரசு அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்வர்களிடம், நேரடி விசாரணை செய்ததன் அடிப்படையில், இந்த முறைகேடுகள், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் நடந்தது, உறுதி செய்யப்பட்டுள்ளது.99 பேருக்கு வாழ்நாள் தடை
மேற்கூறிய மையங்களைத் தவிர, வேறு எந்த இடத்திலும் தவறு நடைபெறவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தேர்வாணையம் கீழ்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது:

* முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், சம்பந்தப்பட்ட, 99 பேரை தகுதி நீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது

* தர வரிசை பட்டியலில் வந்துள்ள, 39 தேர்வர்களுக்கு பதில், தகுதியான வேறு, 39 நபர்களை தேர்வு செய்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

* சம்பந்தப்பட்ட, 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள, சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது

* சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில், தகுதியான தேர்வர்களுக்கு, உடனடியாக பணி வாய்ப்புக்கான கலந்தாய்வு நடத்தப்படும்

* இனிவரும் காலங்களில், எவ்விதமான தவறுகளும் நிகழாவண்ணம், தேர்வு நடைபெறும் முறையில், தகுந்த சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

* தேர்வாணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், வெளிப்படையாக, ஒளிவு மறைவின்றி நடக்கிறது. எனவே, தேர்வர்கள், தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து, நேர்மையான முறையில், தேர்வு எழுதுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. கறுப்பு ஆடுகள் யார்? அமைச்சர் ஆலோசனை!
அரசு பணிகளுக்கு ஆள் எடுக்கும், அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தமிழக அரசு பணியாளர் நிர்வாகம் மற்றும் சீர்திருத்த துறையின் கீழ் இயங்குகிறது. தேர்வாணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படுகிறது. ஆனால், தேர்வாணைய உறுப்பினர்கள் பணியிடம், ஆண்டுக்கணக்கில் காலியாக உள்ளது. 

இந்நிலையில், அரசு துறை ஊழியர்கள் மற்றும் தேர்வாணையத்தில் பணியாற்றும், சில கறுப்பு ஆடுகள் உதவியுடன் முறைகேடு நடந்துள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.இது குறித்து, பணியாளர் நிர்வாகம் மற்றும் சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயகுமார் தலைமையில், செயலர் ஸ்வர்ணா மற்றும் பணியாளர் நிர்வாக துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

முறைகேடுகள் குறித்து, விரைவில், அரசு தரப்பில் அறிக்கை வெளியாகும் என தெரிகிறது. அதில், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களை கைது செய்யவும், அவர்களை பணியில் இருந்து, 'டிஸ்மிஸ்' செய்யவும் உத்தரவிடப்படலாம்.தாசில்தார்கள் உள்ளிட்ட 12 பேரிடம் கிடுக்கிப்பிடி! டி.என்.பி.எஸ்.சி., குரூப் -- 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, இரண்டு தாசில்தார்கள் உட்பட, இடைத்தரகர்கள், 12 பேரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். 

குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து, விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில், முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து, இந்த தேர்வு மையங்களின் முதன்மை அதிகாரிகளாக பணியாற்றிய, ராமேஸ்வரம் தாசில்தார் பார்த்தசாரதி மற்றும் கீழக்கரை தாசில்தார் வீரராஜ் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது, இவர்கள் தலைமையில் செயல்பட்ட இடைத்தரகர்கள் பற்றிய முழு விபரங்களையும், டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள், நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இவர்களுக்கு, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவரின், கார் ஓட்டுனர், அரசு ஒப்பந்ததாரர், வினா - விடைத்தாள்கள் அச்சடித்தோர், டி.என்.பி.எஸ்.சி., ஊழியர்கள் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்துள்ளனர்.இவர்கள் மீது, கூட்டு சதி, மோசடி, போலி ஆவணங்கள் தயாரிப்பு, அரசு ஆவணங்களை போலியாக தயாரித்தல், அரசு நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்துதல், உண்மையான ஆவணம் போல பிறரை நம்பவித்தல் உள்ளிட்ட, 14 சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், ஏழாண்டு சிறையும், அபராதமும் கிடைக்கும்.மேலும், இவர்களில், பார்த்தசாரதி, வீரராஜ் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் உட்பட, 12 பேரிடம், நேற்று சென்னை, எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில், டி.ஜி.பி., ஜாபர் சேட் மற்றும் ஐ.ஜி., சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்த மோசடி தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அலுவலக உதவியாளர் ரமேஷ், 39, எரிசக்தி துறை உதவியாளர் திருக்குமரன், 35, மற்றும் தேர்வு எழுதிய நிதிஷ்குமார், 21, ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.