Image

8ம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் மாதிரி பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது என்று தொடக்கக்கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது.

5ம் மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்துள்ள நிலையில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் மாலை 1.00 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்துமாறு தொடக்கக் கல்வித்துறை அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. மேலும், சிறப்பு வகுப்புகள் மட்டுமல்லாது, மாதிரி பொதுத்தேர்வுகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதுகுறித்து நியூஸ்7தமிழ் நேற்று செய்தி வெளியிட்டது.

அந்த செய்திக்கு விளக்கமளித்துள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் பழனிசாமி, தற்போது இருக்கும் சூழலில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படக்கூடாது என்பதுதான் பள்ளிக்கல்வித்துறையின் நிலைப்பாடு என்றும், 2019 செப்டம்பரில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து நேற்று தவறுதலாக அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளோ, மாதிரி பொதுத்தேர்வுகளோ நடத்தப்படாது என்று இயக்குநர் பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.