மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நாடு முழுவதும், எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தமிழகத்தில், எல்.கே.ஜி., முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ தேர்வு முறை நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், எட்டாம் வகுப்பு வரை, மற்ற மாநிலங்களில் தேர்வு நடத்தாமல், கற்பித்தலில் குளறுபடி ஏற்பட்டது. இதை ஆய்வு செய்த மத்திய அரசு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒரு பொதுவான தேர்வாவது நடத்துவது குறித்து, மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என, உத்தரவிட்டது.

எதிர்ப்பு

இந்த ஆலோசனையை, நாட்டிலேயே முதன் முதலாக, தமிழக அரசு செயல்படுத்தும் வகையில், நடப்பு கல்வி ஆண்டில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, முப்பருவ தேர்வுகளுடன், பொதுத் தேர்வும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில், ஏற்கனவே மூன்று பருவங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது; எதற்காக நான்காவது ஒரு தேர்வு என, பல தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. 10 வயதே ஆன சிறு குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது, அவர்களை மனரீதியாக வலுவிழக்கச் செய்யும் என, கல்வியாளர்கள் கருதினர்.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான தேர்வு ரத்து செய்யப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளதாக, பா.ம.க., அறிவித்துள்ளது; பா.ம.க., சார்பில் நடக்கவிருந்த போராட்டமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து, அரசு தரப்பில் விசாரித்தபோது, கிடைத்த தகவல்கள்:
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரும் நிலையில், மக்களின் எதிர்ப்புகள் நிறைந்த, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொது தேர்வை நடத்துவது, ஆளுங்கட்சிக்கு, ஓட்டு எண்ணிக்கையில் சரிவை ஏற்படுத்தும் என, ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

எனவே, தேர்தல் நடக்க உள்ள, அடுத்த கல்வி ஆண்டில், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கான பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில், தமிழக அரசு தெளிவாக உள்ளது. இந்த ஆண்டு தேர்வை ரத்து செய்வது குறித்து, இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதே நேரம், ஐந்தாம் வகுப்புக்கு மட்டும், இந்த ஆண்டு முதல், தேர்வை ரத்து செய்வதற்கான கருத்துருவை தயாரிக்கும் பணியில், அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு, தகவல்கள் வெளியாகியுள்ளன.